கிறிஸ்தவ தேவாலயங்களில் இலவச தமிழ்வகுப்புகள்..!   பெங்களூரு தமிழ் சங்கம் முயற்சிக்கு பாராட்டு குவிகிறது..!

 

Wesley_Tamil_Church_Bangalore

 

 

 

கருநாடக மாநிலத்தில் சிறப்புற இயங்கிவரும் பெங்களூர்த் தமிழ்ச் சங்கம் ஆற்றிவரும் நற்பணிகளைத் தாங்கள் நன்கறிவீர்கள்

கருநாடக மாநிலத்தில் ஏறத்தாழ ஒரு கோடி தமிழர்கள் வாழ்கின்றனர். தலைநகர் பெங்களூருவின் மக்கள் தொகையில் மூன்றில் ஒரு பங்கு தமிழர்கள் வாழ்கின்றனர்.

அவர்களுள் கூலித்தொழிலாளர் முதல் தொழிலதிபர்கள் வரை அடக்கம். இந்த மண்ணின் மைந்தர்களாக வாழும் தமிழர்களின் எண்ணிக்கை பல இலட்சமாகும்.

அவர்களுடன் வாழ்வாதாரம் தேடி வந்து இங்கு நிலைத்த தமிழர் எண்ணிகையும் பல இலட்சங்கள்!

இருப்பினும் கருநாடகத் தமிழர்கள் தமிழ் கற்கும் வாய்ப்பு ஆண்டுதோறும் குறைந்துகொண்டே வருகின்றது.

கருநாடக அரசின் கல்விக் கொள்கையின்படி, உயர்நிலைப் பள்ளி வரையில் தமிழை முதல்மொழிப்பாடமாகவும் மூன்றாம் மொழிப்பாடமாகவும் படித்திட வாய்ப்பு அளிக்கப்பட்டிருந்தாலும், பள்ளிகள் போதிய ஊக்கம் அளிக்காததாலும், பெற்றோர்கள் பலர் முன்வராததாலும் தமிழ்க் கல்வி அருகி வருகின்றது.

அதனால் புகுமுக வகுப்பிலும் பட்ட வகுப்புகளிலும் முதன்மொழித் தமிழ் என்பது அருகி வருகின்றது. தங்கள் பிள்ளைகளுக்குத் தமிழைக் கற்பிக்கப் பெற்றோர் விரும்பினாலும் வாய்ப்புகள் இல்லாத நிலை உருவாகியுள்ளது.

தமிழைத் தாய்மொழியாகக் கொண்டவர்கள் பலர் தமிழ் எழுதப்படிக்கத் தெரியாதவராகவே உள்ளனர். தமிழை வீட்டில் பேசும் நிலையே அருகி வருகின்றது.

இன்னும் சில ஆண்டுகளில் கருநாடகத்தில் தமிழ்க் குழந்தைகள் முற்றிலும் தமிழ் அறியாதவராக மாறக்கூடிய சூழல் உருவாகக்கூடும்.

இந்த நிலையில் கருநாடகத்தில் வாழும் தமிழ்க் குழந்தைகளுக்குக் குறைந்தது அடிப்படைத் தமிழையாவது கற்பிக்க வேண்டும் என்னும் உந்துதலால், பெங்களூர்த் தமிழ்ச் சங்கம் அதற்கான முயற்சிகளில் ஈடுபட்டு வருகின்றது.

தமிழறியாத் தமிழர்க்குத் தமிழை இலவயமாகவே கற்பித்திட, பெங்களூர்த் தமிழ்ச் சங்கம் முனைந்துள்ளது.

கல்லூரி, உயர்நிலைப் பள்ளிகளில் தமிழ் கற்பித்த, பட்டறிவு மிக்க ஆசிரியர்களைக் கொண்டு எளிய முறையில் தமிழைக் கற்பித்திடும் வகையில் பாடத்திட்டத்தை வகுத்துள்ளோம்.

முதல் முயற்சியாகக் கடந்த கோடை விடுமுறையில் சங்க வளாகத்தில் பயிற்சி வகுப்புகளைத் தொடங்கினோம்.

திங்கள் முதல் வியாழன் வரையில் நாள்தோறும் நாள் ஒன்றுக்கு ஒரு மணி நேரம் எனவும், சனி ஞாயிறு ஆகிய இரு நாள்களில் நாளொன்றுக்கு இரண்டு மணி நேரம் எனவும் இரண்டு அணிகளாகப் பிரித்து, மொத்தம் 32 மணி நேரத்தில் தமிழை எழுத, படிக்கத் தேவையான பாடத் திட்டத்தை வகுத்துப் பயிற்சி வகுப்புகளைத் தொடங்கினோம்.

ஆசிரியர் பெருமக்களும் தங்கள் நல்லாதரவை நல்கி உதவி வருகின்றனர். மாணவர்களுக்கு நூல்களும் பயிற்சி ஏடுகளும் இலவயமாகவே வழங்கப்பெறுகின்றன.

ஆசிரியர்களுக்குப் போக்குவரத்து ஊக்கத் தொகையைச் சங்கமே வழங்கி வருகின்றது.

இந்த முயற்சிக்குத் தமிழரிடையே நல்ல வரவேற்பு உருவான நிலையில், பயிற்சி வகுப்புகள் சிறிராமபுரத்திலும் , சங்க காமராசர் பள்ளியிலும் தொடங்கப் பெற்றன.

இந்த முயற்சி பெங்களூரு வாழ் தமிழர்களால் பரவலாக வரவேற்கப்பெற்று ஓர் இயக்கமாமாகவே மலர்ந்துள்ளது.

சங்கத்தின் இந்த நற்பணியை மெச்சி ஊக்குவித்திடும் வகையில் கிறித்துவத் தேவாலயங்கள் பல பயிற்சி வகுப்புகளுக்கான வாய்ப்புகளை வழங்கிட முன்வந்த வண்ணமுள்ளன.

அதன் பயனாகக் கீழே கொடுக்கப்பட்டுள்ள பட்டியலில் கண்டுள்ளவாறு பயிற்சி வகுப்புகள் சங்கத்தின் முன்னெடுப்பாலும் பள்ளி நிறுவனத்தார், கிறித்துவத் தேவாலயப் பொறுப்பாளர் ஒத்துழைப்பாலும் பெங்களூரு பெருநகர்ப் பகுதிகளில் சிறப்பாக நடைபெற்று வருகின்றன.

பெங்களுரு மட்டுமின்றி, தமிழர்கள் பெருவாரியாக வாழ்ந்துவரும் கோலார் தங்க வயலிலும் அங்குள்ளோர் ஆதரவுடன் பயிற்சி வகுப்புகள் நடைபெற்று வருகின்றன.

கருநாடகத்தில் தமிழர்கள் பெருவாரியாக வாழும் மாவட்டங்களுக்கும் இந்தத் திட்டத்தை விரிவுபடுத்திடும் முயற்சியிலும் இறங்கியுள்ளோம்.

அந்தந்தப் பகுதியில் உள்ள தமிழ்ச் சங்கங்களுடனும் பள்ளி நிறுவனத்தார்களுடனும் கலந்து பேசி வருகின்றோம்.

கருநாடகத்தில் தமிழறியாத் தமிழரே இருக்ககூடாது என்னும் உயரிய நோக்கத்தால், பெங்களூர்த் தமிழ்ச் சங்கம், தமிழ்ப் பயிற்சி வகுப்புகளை இலவயமாக நடத்தி வருகின்றது.

நாளடைவில் அடிப்படைத் தமிழ் என்பதை அடுத்த கட்டங்களுக்கும் எடுத்துச் செல்லவும் திட்டமிட்டுள்ளோம்.

சங்கத்தின் இந்தக் கல்வித் தொண்டின் விளைவாக, ஆசிரியர் ஊக்கத் தொகை, பாட நூல்கள், பயிற்சி ஏடுகள் எனத் திங்களுக்கு ஐயாயிரம் ரூபாய் வரையில் செலாவாகுமெனக் கணக்கிடப்பட்டுள்ளது.

பயிற்சி மய்யங்களின் எண்ணிக்கை பெருகும்போது அதற்கான செலவும் பெருகும் இந்தப் பணி தொய்வின்றித் தொடர்ந்து நடைபெற்று வெற்றியுடன் திகழ்ந்திடும் வகையில் “இனிமைத் தமிழ் அறக்கட்டளை”என்னும் அமைப்பினைத் தக்க முதலீட்டுடன் நிறுவிடத் திட்டமிட்டுள்ளோம்.

தமிழ் பால் பற்றுக் கொண்ட கொடையுள்ளம் கொண்ட சான்றோர் நன்கொடை அளிக்க முன்வந்துள்ளனர். மற்றவர்களும் அறக்கட்டளைக்கு நன்கொடைகளை வாரி வழங்கிட வேண்டுகிறோம்.

கருநாடகத்தில், ‘கருநாடகத் தமிழ்ச் சங்கங்களின் கூட்டமைப்பில்” இணைந்து நற்பணி ஆற்றிவரும் தமிழ்ச் சங்கங்கள் தங்கள் பகுதிகளில் இந்தச் சீரிய பணி நடைபெற உதவிட வேண்டுமென்று கேட்டுக் கொள்கின்றோம்.

மற்ற இடங்களில் இயங்கிவரும் தமிழ் அமைப்புகளும் இந்தப் பணியில் இணைந்து செயலாற்ற வேண்டும் என்று விரும்புகிறோம்.

சங்கங்கள் இயங்கும் பகுதிகளில் உள்ள தமிழ்ப் பள்ளிகளிலோ, பொது இடங்களிலோ இடம் பெற்று இந்தப் பணியினைத் தொடங்கலாம்.

அந்தந்தப் பகுதிகளில் வாழும் தமிழர்கள் இடையே நல்ல முறையில் விளம்பரப் படுத்தி “இனிமைத் தமிழ் அறக்கட்டளை” மேற்கொண்டுள்ள முயற்சி வெற்றி பெற உதவ வேண்டுகிறோம்.

தொண்டுள்ளத்துடன் தமிழ்ப் பிள்ளைகளுக்குத் தமிழ் கற்பிக்க முன்வரும் ஆசிரியப் பெருமக்களுக்கு ஊக்கத்தொகையை, பெங்களூர்த் தமிழ்ச் சங்கமே வழங்கும். மாணவர்களுக்குரிய பாட நூல்களையும் சங்கமே வழங்கும்.

கூட்டமைப்பில் உள்ள சங்கத்தினர் திரு புகழேந்தி அவர்களுடன் தொடர்பு கொள்க

தற்போது தமிழ்ப் பயிற்சி நடைபெற்றுவரும் இடங்கள் :

 1. பெங்களூர்த் தமிழ்ச் சங்கம்
 2. தூய பீட்டர் தமிழ் ஆலயம், காக்ஸ் டவுன்
 3. வெஸ்லி தமிழ் ஆலயம், அசோக் நகர்
 4. தூய ஆவியார் ஆலயம், டேவிசு சாலை
 5. டிரினிடி ஆலயம், மகாத்மா காந்தி சாலை/அலசூரு
 6. பாப்டிச்டு ஆலயம், நாகவரா
 7. கிறிஸ்து இரட்சகர் ஆலயம், யசுவந்தபுரம்
 8. ஆந்தோணியார் ஆலயம், மாகடி சாலை
 9. சிருமலர் பள்ளி, சிறிராமபுரம்
 10. தூய பிலோமினா ஆலயம்
 11. அகபே தமிழ் ஆலயம், காடுகொண்டன அள்ளி
 12. கிருபா உயர்நிலைப் பள்ளி, டேவிசு சாலை
 13. கிருபா நடுநிலைப்பள்ளி, பில்லண்ணா கார்டன்
 14. தூய பவுல் ஆலயம், சிவாஜி நகர்
 15. BMS பள்ளி
 16. Zeion தமிழ் ஆலயம், மாகடி சாலை
 17. கருநாடக தமிழ்மொழிச் சிறுபான்மை நலப்பேரவை, ஆண்டர்சன்பேட்டை, தங்கவயல்
 18. தூய டொம்னிக் ஆலயம், தங்கவயல்

ஒவ்வொரு மையத்திலும் 20க்கு மேற்பட்ட மாணாக்கர் தமிழ் பயின்று வருகின்றனர். இருபதுக்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் தொண்டுள்ளத்துடன் கற்பித்து வருகின்றனர்.

தொடர்புக்கு: தலைவர்/செயலாளர், பெங்களூர்த் தமிழ்ச் சங்கம், 59, அண்ணாசாமி முதலியார் சாலை, பெங்களூரு 560042. தொ.பே: 080 25510062. E mail: info@bangaloretamilsangam

தி.கோ தாமோதரன்
தலைவர்
9449485603 ச.இராமசுப்பிரமணியன்
செயலாளர்
9886713738
மு.மீனாட்சிசுந்தரம் ஒருங்கிணைப்பாளர் 9986021869