பெங்களூர்த் தமிழ்ச் சங்கம் 1950ஆம் ஆண்டு முதல் கருநாடகத்தின் தலைநகராம் பெங்களூருவில் இயங்கிவரும் சீர்மிகு அமைப்பாகும். தமிழ் மொழி, தமிழ்க் கலை – பண்பாடு ஆகியவற்றை வளர்த்தல், தமிழர் – கன்னடர் நல்லுறவை வளர்த்தல் ஆகியவற்றைக் குறிக்கோள்களாகக் கொண்டு, பதிவு செய்யப்பெற்ற இப்பேரமைப்பு, சாதி, மத, அரசியல் கட்சி மாறுபாடுகளுக்கப்பால் இயங்கி வருவதாகும். பின்னாளில், கருநாடகத்தில் மொழிச் சிறுபானமையராக வாழ்ந்துவரும் தமிழர்கள் தம் உரிமைகளை இழந்துவரும் சூழ்நிலையில், கருநாடகத் தமிழர் நலனையும் பேணும் இயக்கமாக நடையிட்டு வருகின்றது. கருநாடகத்தின் ஆட்சி மொழியாகக் கன்னடம் அறிவிக்கப்படுவதற்குப் பல ஆண்டுகள் முன்னரே சங்கத்தில் கன்னடரலாதோர்க்குக் கன்னட வகுப்புகளைத் தொடங்கி நடத்தி வருகிறோம். இன்றளவில் 60,000க்கும் மேற்பட்டோர் சங்கத்தில் கன்னடம் பயின்றுள்ளனர். அத்துடன், தமிழறியாதோர்க்கும் தமிழ் எழுத, படிக்கத் தெரியாத தமிழர்களுக்கும் தமிழ் வகுப்புகளை நடத்தி வருகின்றோம். அனைவரும் பயன்பெறும் வகையில் இசை, நாட்டியம், கருவி இசை, யோகம், கராத்தே வகுப்புகள் நடைபெற்று வருகின்றன. யோக வகுப்பில் இலவய யோக மருத்துவமும் அளிக்கப்பட்டு வருகின்றது. தமிழைப் பயிற்று மொழியாகக் கொண்ட, “பெங்களூர்த் தமிழ்ச் சங்க காமராசர் உயர்நிலப் பள்ளி” இயங்கி வருகின்றது. திங்கள் தோறும் சங்கச் செய்தி இதழாக மட்டுமல்லாமல் பல்துறைக் அட்டுரைகளையும் தாங்கிய ‘ஊற்று’ தின்களிதழ் உறுப்பினர்களுக்கு இலவயமாக அனுப்பப்பட்டு வருகின்றது. சங்க நூலகத்தில் தமிழ், ஆங்கிலம், கன்னடம் ஆகிய மொழிகளில் பல்வேறு துறைகள் சார்ந்த 40,000க்கும் மேற்பட்ட நூல்கள் உள்ளன, நாள் தோறும் இலவயப் படிப்பகமும் இயங்கிவருகின்றது. சங்க நூலகத்தில் தமிழ்ச் சான்றோர்களின் படங்கள் வைக்கப்பட்டுள்ளன. மூன்றாம் மாடியில் உள்ள தொல்காப்பியர் அரங்கிலும் சான்றோர் படங்கள் இடம் பெற்றுள்ளன. மக்கள் நலன் கருதி இலவய ஓமியோபதி மருத்துவம் அளிக்கப்பட்டு வருகின்றது. தமிழ் மொழிக்கும் இனத்திற்கும் பல்லாற்றானும் பாடாற்றிய சான்றோரை என்றென்றும் நினைவிலிறுத்திப் போற்றிடும் வகையில் 30க்கும் மேற்பட்ட அறக்கட்டளைகள் நிறுவப்பெற்று ஆண்டுதோறும் நிகழ்ச்சிகள் நடத்தப்பெறுகின்றன. அத்துடன் சங்கப் பள்ளியில் பயிலும் மாணாக்கருக்கு உதவித்தொகை, சீருடை, பயன்பொருள்கள் வழங்கிடுவதற்காகவும் கொடையாளர்கள் நிறுவிய 10க்கும் மேற்பட்ட அறக்கட்டளைகள் நிறுவப்ப்ட்டுள்ளன. தமிழர்களுக்கே அன்றி, அனைத்து மக்களுக்கும் சிறப்பான முறையில் நற்பணியாற்றிவரும் சங்கம் நான்கு மாடிகளைக் கொண்ட சொந்தக் கட்டிடத்தில் இயங்கி வருகின்றது.. சங்கக் கட்டிடத்தில் அலுவலகம், பயன் வகுப்புகள், நூலகம், படிப்பகம், மருத்துவப் பிரிவுகள் இயங்கி வருகின்றன. தமிழ் – கன்னட மொழியாக்கத்துறையும் இங்கு இயங்கி வருகின்றது. சங்கப் பள்ளி அதற்கெனக் கட்டப்பட்ட தனிக் கட்டிடத்தில் இயங்கி வருகின்றது. பள்ளியில் ஆண்டுதோறும் விடுதலை நாள், குடியரசு நாள், ஆசிரியர் நாள், தலைவர்கள் பிறந்த நாள் விழாக்களுடன் போட்டிகள் கலை நிகழ்ச்சிகள் நிகழ்த்தப்பட்டு வருகின்றன. ஆண்டுதோறும் மாணாக்கர்க்கு, சீருடை, பள்ளிப் பைகள், எழுதேடுகள், எழுது பொருள்கள். கலணிகள் போன்றவை இலவயமாக அளிக்கப்பட்டு வருகின்றன. ஆண்டுதோறும் அறக்கட்டளைச் சொற்பொழிவுகள் கலை நிகழ்ச்சிகள். நாடகப் போட்டி, கருத்தரங்குகள், ஆய்வரங்குகள், மாணாக்கர்/ பொது மக்களுக்குரிய போட்டிகள் நடத்தப்படுகின்றன. கருநாடகம், தமிழகம் மட்டுமின்றி, இந்தியாவின் பிற பகுதிகளில் இருந்தும் இலக்கியம் அரசிய,ல் ஆன்மிகம்., இதழியல், மொழியியல், கலைத்துறை எனப் பல்துறைச் சான்றோர் சங்க நிகழ்ச்சிகளில் கலந்து சிரப்பித்து வருகின்றனர். சங்கத்தில் சிறப்புற இயங்கிவரும் “திருமண மேடை”த் துறையில் பல்லாயிரக் கணக்கில் தமிழர்கள் பதிவு செய்து பயனடைந்து வருகின்றனர். ஆறு கிழமைகளுக்கு ஒரு முறை நடைபெறும் நேர்காணல் நிகழ்ச்சியில் நூற்றுக் கணக்கில் ஆர்வமுடன் அன்பர்கள் கலந்துகொள்கின்றனர். இதுவரையில் மேற்பட்ட நேர்காணல் நிகழ்ச்சிகள் நடந்துள்ளன.  சங்க உறுப்பினர்களும் பிறரும் தம் திறமைகளை வளர்த்துக் கொள்ள உதவிடும் வகையில், திங்கள்தோறும் கருத்தாங்கமும், ஏரிக்கரைப் பாட்டரங்கமும் பல்வேறு தலைப்புகளில் நடத்தப்பட்டு வருகின்றன. சங்க ஏரிக்கரைப் பாவலர்கள் பலர் தமிழ்நாட்டுப் பாட்டரங்குகளிலும் வானொலி நிகழ்ச்சிகளிலும் பங்கு பெற்றுச் சங்கத்திற்குப் பெருமை சேர்த்து வருகின்றனர். பல பாவலர்கள் தம் பாத்தொகுப்புகளை நூலாக வெளியிட்டுள்ளனர். அவர்களுடைய நூல்கள் சங்க நிகழ்ச்சிகளிலேயே வெளியிடப்பட்டு வருகின்றன. தமிழ் இலக்கிய ஆர்வலர்களின் இலக்கிய வேட்கையைத் தணிக்கும் வகையில் ஒவ்வொரு ஞாயிற்றுக் கிழமையும் சிறப்பு மிக்க பேராசிரியர்களைக் கொண்டு இலக்கிய வகுப்பு நடத்தப்படுகின்றது. 1991இல் நிறுவப்ப்ட்டு, பதினெட்டு ஆண்டுகள் திறக்கப்படாமல் இருந்த ஐயன் திருவள்ளுவர் சிலை கருநாடக – தமிழக அரசுகளின் நல்லிணக்கப் போக்கால் கடந்த 09 – 08 – 2009 அன்று அலசூர் ஏரிக்கரையில் நா.நீலகண்டன் சதுக்கத்தில் தமிழர் மனக்குளிரத் திறந்து வைக்கப்பட்டது..  சங்க இலக்கியங்களான எட்டுத்தொகை, பத்துப்பாட்டு நூல்களைக் கன்னடத்தில் மொழி பெயர்த்திடும் திட்ட வரைவை, “செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனத்திடம்” சங்க,ம் முன்வைத்தபோது, அறுபதாண்டுகளுக்கு மேலாகச் சங்கம் ஆறிவரும் பணிகளைக் கருத்தில் கொண்டு அப் பெரும்பணியைச் சங்கத்திற்கு வழங்கியது. பல்கலைக் கழகங்கள் அல்லாத ஓர் அமைப்பிற்கு மொழிபெயர்ப்புப் பணி வழங்கப்பட்டது இதுவே முதல் முறை என்பது குறிப்பிடத்தக்கதாகும் இது சங்கப் பணிகளுக்குக் கிடைத்த ஏற்பாகும் சங்கத்தின் 60 ஆண்டுக் கால வரலாற்றில் முதன்முறையாக ஒரே பருவத்தில், 4000 சதுர அடி கொண்ட அரங்கம், கழிப்பறை/ குளியலறைகள் கொண்ட நான்காம் மாடிக் கட்டிடம் முடிக்கப்பட்டுள்ளது. சங்கப் பணிகளைப் பாராட்டும் வகையில், பெங்களூரு மத்தியத் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் மாண்புமிகு பி.சி. மோகன் அவர்கள், சங்க நான்காம் மாடிக் கட்டிடம் கட்டுவதற்காகத் தம்முடைய தொகுதி மேம்பாட்டு நிதி (MPLADS)யிலிருந்து நிதி ஒதுக்க இசைந்து, அதற்கான பரிந்துரையை, பெங்களுரு பெருநகர் மன்றத்திற்கு அனுப்பியதன் விளைவாக நிதி கிடைத்தது பணிகள் முடிக்கப்பெற்று, 28.07.2013 அன்று கட்டிடத்தை திரு பி.சி.மோகன் அவர்களே திறந்து வைத்தார்கள். இந்த நிதி கிடைக்கப் பேருதவியாய் நின்ற பெருநகர மன்ற உறுப்பினரும் சங்க உறுப்பினருமான திரு பி.தன்ராஜ் நிகழ்ச்சிக்குத் தலைமை தாங்கினார்.  சங்கம் நடத்திவரும் காமராசர் உயர்நிலைப் பள்ளிக் கட்டிடமும் விரிவாக்கம் செய்யப்பெற்று, 25 அறைகளையும் மூன்றாவது தளத்தில் 4000 சதுர அடி பரப்பிலான அரங்கத்தையும் கொண்ட மூன்று மாடிக் கட்டிடமாக எழிலுறத் திகழ்கின்றது. நன்கொடையாளர்கள் பலர் மனமுவந்து அளித்த நன்கொடியுடன் சங்கத்தின் ஏம நிதியிலிருந்து கட்டிடம் முடிக்கப்பட்டது. 27.07.2013 அன்று கட்டிடமும் அரங்கும் கருநாடக அமைச்சர்கள் மாண்புமிகு கே.ஜே.ஜார்ஜ், மாண்புமிகு தினேஷ் குண்டுராவ் ஆகியோரால் திறந்து வைக்கப்பட்டது.. விரிவாக்கம் செய்யப்பட்ட பள்ளிக் கட்டிடத்தை முழுமையாகப் பயன்படுத்தும் நோக்கில்., தமிழை முதன்மொழிப் பாடமாகக் கொண்ட ஆங்கில வழி உயர்நிலைப் பள்ளி நடத்தப் பள்ளிக் கல்வித்துறையின் இசைவு பெறப்பட்டுள்லது. புகுமுக வகுப்புகளையும் தொடங்குவதற்கான முயற்சிகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. பொதுமக்களுக்கு மிகவும் பயன் தரும் வகையில் திங்கள் தோறும் மூலிகைக் கண்சொட்டு மருந்து மருத்துவம் இலவயமாக அளிக்கப்பட்டு வருகிறது. அத்துடன் அவ்வப்போது, சிறந்த கண் மருத்துவ மனைகளின் உதவியுடன் இலவயக் கண் மருத்துவ முகாம்கள் நடத்தப்பட்டு, இலவயமாகக் கண் அறுவை மருத்துவம் அளிக்கப்படுகின்றது. அத்துடன் பல் மருத்துவம் உடல்நல ஆய்வு முகாம்களும் நடத்தப்படுகின்றன. மக்கள் நலன் சார்ந்த நிகழ்ச்சிகளைப் பிற அமைப்பினர் நடத்தும்போது, அவர்களுக்குச் சலுகைப் பேணல் கட்டணத்துடன் தேவைக்கேற்ப அரங்குகள் அளிக்கப்படுகின்றன. அது போலவே தமிழ் நூல்கள் வெளியீட்டு விழா,, சான்றோர் பாராட்டு விழா போன்று பிறர் நடத்தும் நிகழ்ச்சிகளுக்கும் அரங்குகள் அளிக்கப்பட்டு வருகின்றன.. தமிழர்கள் மனங்குளிர்ந்து போற்றும் வகையில் சங்க முகப்பில் எழில் மாடம் அமைக்ககப் பெற்று ஐயன் திருவள்ளுவர் சிலை அமைக்கப்பட்டுள்ளது. ஆண்டுதோறும் திருவள்ளுவர் நாளையும் திருவள்ளுவர் சிலை திறப்பு நாளையும் கொண்டாடி வருவதன் பயனாகவும் சிலை திறப்பு நாளை பெருநகர் மன்றமே கொண்டாடும் என்று நகர மேயர் அறிவித்துள்ளார்.  சங்கமும், இந்தியப் பல்கலைக் கழகத் தமிழாசிரியர்கள் மன்றமும் இணைந்து 2012 ஆம் ஆண்டு, இந்தியா, சிங்கப்பூர், மலேசியா நாடுகளிலிருந்து 400க்கும் மேற்பட்ட பேராளர்கள் கல்ந்து கொண்ட மாநாடு/கருத்தரங்கு பலரும் பாராட்டும் வகையில் நடத்தப்பட்டது. இந்தக் கருத்தரங்கம் எப்போதும் கல்லூரி வளாகங்களிலேயே நடத்தப்படுவது வழக்கம். ஆயின் நம் சங்கத்தின் பணிகளுக்கு ஏற்பளிக்கும் வகையில் இக் கருத்தரங்கம் சங்கத்தில் இரு முறை நடத்தப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத் தக்கது. சங்கத்தின் செயற்பாடுகளைப் போற்றிடும் வகையில் தஞ்சையில் இயங்கிவரும் தாய்த்தமிழ் அறக்கட்டளை சென்னையில் நடத்திய ‘திருக்குறள் தேசிய நூல்’ கருத்தரங்கில், தமிழ் மொழி இலக்கியத் தொண்டில் பெங்களூர்த் தமிழ்ச் சங்கம் இந்தியாவின் தலை சிறந்த தமிழ்ச் சங்கம் என்று தேர்ந்தெடுத்து விருது வழங்கிச் சிறப்பித்தது. 2013 ஆகசுடுத் திங்கள் 16, 17 நாள்களில் மலேசியப் பல்கலைக் கழகத்தின் இந்திய ஆய்வியல் துறையும் , சென்னையின் கலைஞன் பதிப்பகமும் இணைந்து கோலலம்பூரில் நடத்திய மாநாட்டில், ”தமிழ்வேள்விக்கான மாசிலாமணி விருதினை”, தமிழ்நாட்டிற்கு வெளியே சிறப்பாகச் செயற்படும் தமிழமைப்பு என்ற அடிப்படையில் நம் சங்கத்தையும் தில்லித் தமிழ்ச் சங்கத்தையும் தேர்ந்தெடுக்கப் பெற்றுச் சிறப்பிக்கப்பட்டன.  நாமக்கல்லில் இயங்கிவரும் “சின்னப்ப பாரதி அறக்கட்டளை” 2014 அக்டோபர்த் திங்களில் நம் சங்கத்தைப் பாராட்டி விருதளித்துச் சிறப்பித்தது. இவ்வாறு, பெங்களூர்த் தமிழ்ச் சங்கம், தமிழ்ப் பணியுடன் தமிழர் நலப்பணி, தமிழ்க் கல்விப் பணி ஆகியவற்றையும் மேற்கொண்டு, தமிழரல்லாதாரும் பயன்படும் வகையில் சிறப்புறப் பணியாற்றி, மற்ற சங்கங்களுக்கு எடுத்துக்காட்டாகத் திகழ்கிறது. சங்கத்திற்கு தமிழகம், இந்தியாவின் பிற பகுதிகள், பிற நாடுகளிலிருந்து வருகை புரியும் பெருமக்களின் போற்றுதலுக்குரிய வகையில் இயங்கி வருகின்றது. சங்கத்தின் பணிகளுக்கும் நற்செயல்களுக்கும் கொடையுள்ளம் படைத்த சான்றோரும் கருநாடக வாழ் தமிழர்களின் ஆதரவும் அடிப்படைகளாகவும் உந்தாற்றலாகவும் திகழ்கின்றன.

சங்கம் தோற்றுவித்த சான்றோர் பெருமக்கள்